* மாதுமை தளம் இனி தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் / உலக அம்மாக்களின் துயரம் மாதுமை கவிதை கருத்தாடல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது / ''ஒற்றைச் சிலம்பு'' கவிதைத்தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது / தொடர்புகளுக்கு mathumai.sivasubramaniam@gmail.com *

Tuesday, August 12, 2008

இன்னும் இருக்கிறது ஆகாயம்

----------------------------------------------------
குடித்து மிச்சமிருந்து
புளித்துத் திரண்டிருந்த
அரைக் கோப்பை பால்
பாவித்தும் தூக்கியெறியப்படாத
நொய்ந்த ஆணுறை
படித்தும் படிக்காததுமாய்
பரப்பிக் கிடந்த பத்திரிகைகள்
உடைத்த பிஸ்கட் பக்கட்டுக்கள், சப்பாத சுவிங்கங்கள்
புதிதாய் பின்னப்பட்டிருந்த சிலந்தி வலைகள்
தண்ணீர் காணாத
ஒற்றை ரோஜா செடி - என்பனவாய்
வயதிற்கு வந்த நாள் முதல்
நான் சேமித்த பொறுமைகளை சோதிக்க
வீடு முழுக்க இறைந்து கிடந்தன
உன் ஆண்மையும் அகங்காரங்களும்
என் நோய்வாய்ப்பட்ட ஒரு வாரத்தில்.
பறவைகளுக்குத் தான் சிறகுகள்
வேலைக்கார பெண்டாட்டிகளுக்கு ஏது அவை?
ஆனாலும் - இன்னும் இருக்கிறது ஆகாயம்
விரிந்து பரந்து என் ஆகாயம் மட்டும்.
-------------------------------------
மாதுமை
-----------------------------

5 comments:

மு. மயூரன் said...

ஒருவாறு உங்கள் வலைப்பதிவை தேடிக் கண்டுபிடித்துவிட்டேன் :-)

உங்களுடைய புத்தகம் வெளிவந்ததும் கவிதைகள் பற்றி எனக்கு இருக்கும் கருத்துக்களைச் சொல்கிறேன்.

உங்களை மறுபடி "கண்டுபிடித்ததில்" மிகுந்த மகிழ்ச்சி.

கவிதைகளுக்கான படங்களை வரைவது யார்?

நீங்களா?

geevanathy said...

வணக்கம்

உங்கள் உணர்வுகளைப்புரிந்துகொள்ள முடிகிறது...


நான் ஊகிப்பது சரியாக இருந்தால் பாடசாலைக்காலத்தில் இருந்த உங்கள் எழுத்தின் வேகத்தில் எந்தக்குறைவுமில்லை.

தொடர்ந்து எழுதுங்கள்.......

ampalam said...

மாதுமை
உங்களின் கவிதைகளில் பறத்தலுக்கான எத்தனங்களையும் அதற்கான முனைவையுமே உணர முடிகிறது.மொழி உங்களுக்கு வசப்பட்டு விட்டது.
ஆயினும் ஒற்றைப்பரிமாணம் கொண்ட பார்வையே பல இடங்களில் உங்கள் சொற்கள் தாங்கி நிற்கின்றன. அதிகாரத்தின் குறிப்பான்களாக ஆண்களை மட்டுமே மையம் கொள்வது சரியா?
பறவைகளின் பார்வை விசாலிப்பானவை.
நீங்கள் பறக்க எத்தனிப்பதற்கு முன்பு பார்வையின் கோணங்களையும் அகலித்துக் கொள்ளுங்கள்.
இது நட்புடன் கூடிய வார்த்தைகள் மட்டுமே.
மற்றும்படி தனித்துவமான தளத்தில் , கலகத்தின் உன்னத ஒலியாய் உங்கள் கவிதைகள் இருப்பதை மறுக்க முடியாது.
-பிரபா(நம்பிக்கைகளைச் சுமந்தபடி)

Mathumai said...

Thanks Mayuran , Jeevaraj and Ampalam ( Prabha).

Prabha, could you mail to my Email address ( mathumai.sivasubramaniam@gmail.com)?
i can share some OTHER poems with you.
thanks again

vkm said...

உங்கள் ஆக்கங்களைப் படைப்புக்களை வாசிக்கமுடிந்தது சந்தோஸம்.தொடந்து வாசிப்பேன்எல்லாம் நல்லபடி இருக்கிறது. எழுத்துக்களால் மட்டும் கண்டுகொள்ளும் நட்பாய்..........