* மாதுமை தளம் இனி தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் / உலக அம்மாக்களின் துயரம் மாதுமை கவிதை கருத்தாடல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது / ''ஒற்றைச் சிலம்பு'' கவிதைத்தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது / தொடர்புகளுக்கு mathumai.sivasubramaniam@gmail.com *

Sunday, August 10, 2008

புணரும் மிருகமாய் நீ

----------------------------------------------
அந்த நிமிடங்களில் நீ
நீயாக இருக்கவில்லை
உன்னுள் இருந்த மதுபோதை
ஒருபுறம் காமப் பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டில்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்படியான போராட்டதினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஒன்று...இரண்டு....மூன்று என
என் யோனித் துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையின் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக் காற்றின்
மது நெடி சாட்டையடித்தது...
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனதில் நிழலாடியது
இதைத்தானா
"பெண் பொறுப்பதற்கு
பிறந்தவள்" என்றாய் அம்மா?
உன் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரை பொறுத்திருந்தேன்
அப்பாடா..
உன் நீர் கசிந்து
நீ மனிதனாய்
என்ன உணர்ந்தாயோ
"பசிக்குதா?" என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
"வலிக்குது" என்றேன்
எந்தப் பதற்றமும் இல்லாமல்
"ஸாரிடா செல்லம்" என்றாய்...
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர்த்துளிகள்
மெளனமாய் வழிந்தன...
சில நிமிட மெளனங்கள்...
எங்கே என் தலை கோதி
என்னை வருடிக் கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது...
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.
---------------------------------------------
மாதுமை
---------------------------------

2 comments:

Theepachelvan said...

மாதுமையின் கவிதைகள் எளிமையான மொழியில் பேசுகின்றன. புணர்ச்சியின் பிறகு வலியுடன் தூங்காமலிருக்கும் கோபத்தையும் பேசத்துணிகிற வார்த்தைகளையும் கொண்டிருக்கின்றன. அறையின் மூலைகளில் கசிந்து கிடக்கும் குருதியின் மொழிகளை முகத்தில் அறைகின்றன. கூடுதல் அல்லது இணைதல் என்பதலிருக்கும் வெளிகளையும் நெருக்கத்தையும் இடைவெளிகளில் தேடியலைகின்ற வேட்கையினை காணமுடிகிறது.

இத்தனை நாளாய் இவரின் கவிதைகளை நான் படிக்காமலிருந்திருக்கிறேன்.
----------------------------
தீபச்செல்வன்

ஆர்வா said...

சே... என்ன ஒரு கவிதை.. என்ன ஒரு அழுத்தம் வார்த்தைகளில்..... இது வெறும் கவிதை அல்ல. சொல்ல முடியாத ஒரு வேதனையை மனதில் ஏற்றிப்போகின்றன உங்களது "புணரும் மிருகமாய் நீ" என்ற கவிதை. படித்து முடித்தபின்னும் மனதின் உள்ளே ரம்பமாய் அறுத்துக்கொண்டிருக்கின்றன வார்த்தைகள். இவ்வளவு வலிகளை மனதில் ஏற்றிப்போகும்படி ஒரு கவிதையை சமீபத்தில் படித்ததில்லை. ஒரு பெண்ணின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் எல்லாமே தெளிவாய் தெரிகின்றன. மாதுமை இது ஒரு உயிர்ப்புள்ள படைப்பு...