* மாதுமை தளம் இனி தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் / உலக அம்மாக்களின் துயரம் மாதுமை கவிதை கருத்தாடல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது / ''ஒற்றைச் சிலம்பு'' கவிதைத்தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது / தொடர்புகளுக்கு mathumai.sivasubramaniam@gmail.com *

Tuesday, August 12, 2008

அப்பா

-----------------------------------------------
சாதாரண அரச உத்தியோகத்தரின்
ராஜகுமாரி நான்
இரண்டறை அரண்மனைக்கு
சொந்தக்காரியும் கூட!

வேண்டுவனவெல்லாம் கிடைக்கும்
கற்பகதருவின் ஏகபுத்திரியென
அழைக்கப்படுபவள்.
“அப்பா பிடிக்கும்
அம்மா பிடிக்காது”
வெளிப்படையாகச் சொல்லித்திரியும்
சுதந்திர ஊடகம் நான்.

“உனக்குச் சித்தி வரக்கூடும்”-
அம்மா அழுத போதும்
நானோ தீவிர “அப்பா ஆதரவாளி”.
மனிதமும் காதலும் ரசனையும்
கோபமும் தாபமும்
இன்னும் இன்னும் இன்னும்
அப்பாவின் எல்லாமும் கொண்ட
வீரிய விந்தொன்றின்
வெளிப்பாடு நான்.

அப்பாவின் காதல்கள்-
இரவு நேரக் கதைகள்
அப்பாவின் கண்ணியம்-
என் பகல் நேர வியூகம்

அம்புலி மாமா சந்திர மாமாவிற்கு முன்னமே
பாரதியையும் கால்மாக்ஸ்ஸையும்
தெரிந்து கொண்ட
அதிஸ்டசாலி நான்.

எல்லாம் அப்பாவாகிப் போன பின்பும்
அப்....பாவே நானாகிய பின்னும்
எதிரிகளாய் முறைத்துக் கொள்கிறோம்
என் காதல் வயப்பாட்டின் மனிதத்தில்…

தெரிந்திருந்தால்
உருவாக்கியிருப்பாரோ
நொய்ந்த விந்தொன்றின் மூலம்
அம்மா போன்ற சாதாரண பெண்ணாக!!!
April 2007
---------------------------------------
மாதுமை
----------------------

No comments: