* மாதுமை தளம் இனி தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் / உலக அம்மாக்களின் துயரம் மாதுமை கவிதை கருத்தாடல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது / ''ஒற்றைச் சிலம்பு'' கவிதைத்தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது / தொடர்புகளுக்கு mathumai.sivasubramaniam@gmail.com *

Tuesday, September 1, 2009

இப்படிக்கு அம்மா


By மாதுமை


இலங்கை அம்மாவிற்கு
எதுவிதத்திலும் சளைக்காமல்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்
பலஸ்தீன அம்மா
சிதைக்கப்பட்டிருந்தாள் திபெத்திய அம்மா
சிதிலமடைந்திருந்தாள் சிம்பாபே அம்மா
நடைப்பிணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா
நிர்வாணப்படுத்தப்பட்டிருந்தாள் டாபுர் அம்மா
கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கஅம்மா

அம்மாக்கள் மட்டும் ஒற்றுமையாய் இருந்தனர்
உலக துயரங்களை சுமக்க.
----------------------------------------------

5-12-2007
என் அன்பான மாது,


உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன். இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஓரே கவலையாக இருக்கின்றது. உன்னைப் பார்க்க வேண்டும் போல் மனதில் ஓர் இனம் புரியாத ஆசை. நீ எங்கிருந்தாலும் நல்ல படியாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். நாட்டு நிலைமையை யோசித்தால் அது வேறு கவலை. நீங்கள் எல்லாம் வந்து போகக் கூடிய நிலைமை எப்போ வரும் என்று ஏக்கம். உனது சுகத்திற்கும் சந்தோசமான எதிர்காலத்திற்கும் இறைவனை வேண்டும்

உனது அன்பான அம்மா.
-------------------------------------

Thursday, August 27, 2009

பெண் பொறுப்பதற்குப் பிறந்தவள்


By மாதுமை

அந்த நிமிடங்களில் நீயாக நீயிருக்கவில்லை
உன்னுள் இருந்த
மதுபோதை ஒருபுறம் காமப்பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டிலும்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்பிடியான போராட்டத்தினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஓன்று. இரண்டு. மூன்று என
என் யோனித்துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையாய் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக்காற்றின்
மதுநெடி சாட்டையடித்தது
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனத்தில் நிழலாடியது
இதைத்தானா
“பெண் பொறுப்பதற்குப்
பிறந்தவள்” என்றாய் அம்மா?
என் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரைப் பொறுத்திருந்தேன்
அப்பாடா
உன் நீர் கசிந்து
நீ மனிதனானாய்
என்ன உணர்ந்தாயோ
“பசிக்குதா?” என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
“வலிக்குது” என்றேன்
எந்தப் பதட்டமும் இல்லாமல்
“ஸாரிடா செல்லம்” என்றாய்
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர் துளிகள்
மௌனமாய் வழிந்தன
சில நிமிட மௌனங்கள்
எங்கே என் தலைகோதி
என்னை வருடிக்கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.
------------------------------

Tuesday, August 12, 2008

இன்னும் இருக்கிறது ஆகாயம்

----------------------------------------------------
குடித்து மிச்சமிருந்து
புளித்துத் திரண்டிருந்த
அரைக் கோப்பை பால்
பாவித்தும் தூக்கியெறியப்படாத
நொய்ந்த ஆணுறை
படித்தும் படிக்காததுமாய்
பரப்பிக் கிடந்த பத்திரிகைகள்
உடைத்த பிஸ்கட் பக்கட்டுக்கள், சப்பாத சுவிங்கங்கள்
புதிதாய் பின்னப்பட்டிருந்த சிலந்தி வலைகள்
தண்ணீர் காணாத
ஒற்றை ரோஜா செடி - என்பனவாய்
வயதிற்கு வந்த நாள் முதல்
நான் சேமித்த பொறுமைகளை சோதிக்க
வீடு முழுக்க இறைந்து கிடந்தன
உன் ஆண்மையும் அகங்காரங்களும்
என் நோய்வாய்ப்பட்ட ஒரு வாரத்தில்.
பறவைகளுக்குத் தான் சிறகுகள்
வேலைக்கார பெண்டாட்டிகளுக்கு ஏது அவை?
ஆனாலும் - இன்னும் இருக்கிறது ஆகாயம்
விரிந்து பரந்து என் ஆகாயம் மட்டும்.
-------------------------------------
மாதுமை
-----------------------------

என் புத்தகம்

-------------------------------------
திறந்திருந்தது
என் புத்தகம்
தாண்டிச் சென்றவர்கள்
நின்று வாசித்தார்கள்.

வழமைபோல – சில
பக்கங்கள் களவாடப்பட்டன
இருந்தும்
சுவாரசியம் குறையவில்லை
தொடர்ந்தும் வாசித்தார்கள்.

சிலர் அழுதார்கள்
சிலர் சிரித்தார்கள்
சிலர் ஏதேதோ பேசினார்கள்
எல்லாவற்றையும் கேட்டும்
திறந்துதானிருந்தது புத்தகம.;

காற்று சில பக்கங்களை
திறந்து விட்டிருந்தது
கைகள் திருப்பிய பக்கங்களுக்கும்
காற்று திருப்பிய பக்கங்களுக்கும்
வித்தியாசம் இருந்தன.

எங்கிருந்தோ தாழப்பறந்து
வந்த பறவை
எச்சம் போட்டுப் பறந்தது
பறவையை துரத்தி வந்த
நாயொன்று
புத்தகத்தை கௌவிச் சென்றது.
-----------------------------------
மாதுமை
------------------

திரவப்பாடல்

-------------------------------------------------
கைக்கெட்டிய தூரத்தில் தான் இருந்தது
அந்த திரவக் குடுவை.

திரவம்

நினைவு தெரிந்த நாள் முதலாய்
தளும்பிக் கொண்டிருந்தது.

வட்ட அலை இட்ட படியே
சதா மிதந்து கொண்டிருந்தது
மையத்தில் தொடங்கி விளிம்பு வரை.

மெல்லிய பூமி அதிர்வுத் தாளத்தில்
பாடிக் கொண்டிருந்தது
ஒலி இல்லாத பாடலைப் ஒன்றை.

எந்த குறுக்கீடுகளும் எந்த நேரத்திலும்
பாடலை நிறுத்தி விடுமென்ற போதிலும்

அரிச்சந்திரனுக்கு
சந்திரமதித் தாலி போல
எனக்கு மட்டும்
கேட்டுக் கொண்டிருந்தது
அந்த
மௌனப் பாடல்.
------------------------------------------
மாதுமை
---------------------

அப்பா

-----------------------------------------------
சாதாரண அரச உத்தியோகத்தரின்
ராஜகுமாரி நான்
இரண்டறை அரண்மனைக்கு
சொந்தக்காரியும் கூட!

வேண்டுவனவெல்லாம் கிடைக்கும்
கற்பகதருவின் ஏகபுத்திரியென
அழைக்கப்படுபவள்.
“அப்பா பிடிக்கும்
அம்மா பிடிக்காது”
வெளிப்படையாகச் சொல்லித்திரியும்
சுதந்திர ஊடகம் நான்.

“உனக்குச் சித்தி வரக்கூடும்”-
அம்மா அழுத போதும்
நானோ தீவிர “அப்பா ஆதரவாளி”.
மனிதமும் காதலும் ரசனையும்
கோபமும் தாபமும்
இன்னும் இன்னும் இன்னும்
அப்பாவின் எல்லாமும் கொண்ட
வீரிய விந்தொன்றின்
வெளிப்பாடு நான்.

அப்பாவின் காதல்கள்-
இரவு நேரக் கதைகள்
அப்பாவின் கண்ணியம்-
என் பகல் நேர வியூகம்

அம்புலி மாமா சந்திர மாமாவிற்கு முன்னமே
பாரதியையும் கால்மாக்ஸ்ஸையும்
தெரிந்து கொண்ட
அதிஸ்டசாலி நான்.

எல்லாம் அப்பாவாகிப் போன பின்பும்
அப்....பாவே நானாகிய பின்னும்
எதிரிகளாய் முறைத்துக் கொள்கிறோம்
என் காதல் வயப்பாட்டின் மனிதத்தில்…

தெரிந்திருந்தால்
உருவாக்கியிருப்பாரோ
நொய்ந்த விந்தொன்றின் மூலம்
அம்மா போன்ற சாதாரண பெண்ணாக!!!
April 2007
---------------------------------------
மாதுமை
----------------------

Monday, August 11, 2008

பின்னிரவில்

-----------------------------------------------
நெருங்குவதாய்த் தெரிகிறது
உனக்கும் எனக்குமான
இடைவெளி

இடைவெட்டுகளின் தேய்மானத்தோடு
விலகுகிறது
நேசம்

ஆயிரம் கலவிகளின் பின்னும்
வேகம் குறையாமல் சுரக்கிறது
ஆன்மா

வெற்றுச் சம்பெயின் போத்தல்
நீரையும் பெயரறியா ஊதாப்பூக்களையும் சுமக்கின்றது

ஓர் பின்னிரவில் நீ தீர்த்த போத்தல் அதுவாய் ஞாபகம்

அதனினும் பின்னிரவில் அடம்பிடித்து
உன்னைப் பல்துலக்க வைத்தது முத்தமிடத்தான்

ஊதாப்பூக்களின் மையத்தில்
இன்னம் ஆழ்ந்திருக்கிறது
பற்பசையும் சம்பெயினும் கலந்த வாசத்தில் ஒரு முத்தம்

நாளை: கண்ணாடிக் கழிவுகளைக் கழிக்கும் தினம்
இதுவும் மாதத்தில் ஒருமுறை வந்துவிடுகிறது.
---------------------------------------------
மாதுமை
---------------------------------