* மாதுமை தளம் இனி தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் / உலக அம்மாக்களின் துயரம் மாதுமை கவிதை கருத்தாடல் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது / ''ஒற்றைச் சிலம்பு'' கவிதைத்தொகுப்பு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது / தொடர்புகளுக்கு mathumai.sivasubramaniam@gmail.com *

Tuesday, September 1, 2009

இப்படிக்கு அம்மா


By மாதுமை


இலங்கை அம்மாவிற்கு
எதுவிதத்திலும் சளைக்காமல்
கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்
பலஸ்தீன அம்மா
சிதைக்கப்பட்டிருந்தாள் திபெத்திய அம்மா
சிதிலமடைந்திருந்தாள் சிம்பாபே அம்மா
நடைப்பிணமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா
நிர்வாணப்படுத்தப்பட்டிருந்தாள் டாபுர் அம்மா
கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கஅம்மா

அம்மாக்கள் மட்டும் ஒற்றுமையாய் இருந்தனர்
உலக துயரங்களை சுமக்க.
----------------------------------------------

5-12-2007
என் அன்பான மாது,


உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன். இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஓரே கவலையாக இருக்கின்றது. உன்னைப் பார்க்க வேண்டும் போல் மனதில் ஓர் இனம் புரியாத ஆசை. நீ எங்கிருந்தாலும் நல்ல படியாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன். நாட்டு நிலைமையை யோசித்தால் அது வேறு கவலை. நீங்கள் எல்லாம் வந்து போகக் கூடிய நிலைமை எப்போ வரும் என்று ஏக்கம். உனது சுகத்திற்கும் சந்தோசமான எதிர்காலத்திற்கும் இறைவனை வேண்டும்

உனது அன்பான அம்மா.
-------------------------------------

Thursday, August 27, 2009

பெண் பொறுப்பதற்குப் பிறந்தவள்


By மாதுமை

அந்த நிமிடங்களில் நீயாக நீயிருக்கவில்லை
உன்னுள் இருந்த
மதுபோதை ஒருபுறம் காமப்பசி மறுபுறம்
இரண்டின் வெளிப்பாட்டிலும்
நீ புணரும் மிருகமானாய்
காதலுக்கு மட்டுமே கசிகின்ற என் யோனி
உன் ஆவேசத்திற்கு கசிய மறுத்தது
உன் விடாப்பிடியான போராட்டத்தினூடே
என் வறண்ட யோனிக்குள்
தாகம் தீர்க்க முயன்றது உன் ஆண்குறி
ஓன்று. இரண்டு. மூன்று என
என் யோனித்துவாரத்தை
நீ ஊடறுக்கும் ஒவ்வொரு முறையும்
உடலை விட மனது வலித்தது
உன் வேகம் அதிகரிக்க
என்னில் கண்ணீர் தயாரானது
வழமையாய் காதலில் கசிந்து
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிடும் எனக்கு
உன் மூச்சுக்காற்றின்
மதுநெடி சாட்டையடித்தது
எங்கிருந்தோ வந்து
அம்மாவின் முகம்
மனத்தில் நிழலாடியது
இதைத்தானா
“பெண் பொறுப்பதற்குப்
பிறந்தவள்” என்றாய் அம்மா?
என் உயிரின் கடைசிச் சொட்டு
பலம் வரைப் பொறுத்திருந்தேன்
அப்பாடா
உன் நீர் கசிந்து
நீ மனிதனானாய்
என்ன உணர்ந்தாயோ
“பசிக்குதா?” என்றாய்
முழுதாய் உனது பசி தீர்ந்த பின்
குரல் தழும்ப
“வலிக்குது” என்றேன்
எந்தப் பதட்டமும் இல்லாமல்
“ஸாரிடா செல்லம்” என்றாய்
உருண்டு திரண்டிருந்த
என் கண்ணீர் துளிகள்
மௌனமாய் வழிந்தன
சில நிமிட மௌனங்கள்
எங்கே என் தலைகோதி
என்னை வருடிக்கொடுப்பாயோ
என எதிர்பார்த்த எனக்கு
உன் குறட்டை ஒலி
உயிரை வதைத்தது
உன் தாகம்
உன் தேவை- தீர்ந்ததால்
உனக்கு உறக்கம்
என் வலி
என் அழுகை-ஓயாமல்
விழி மூடி விழித்திருந்தேன்.
------------------------------